Enjoy FREE SHIPPING on Every Order

Handcrafted with tradition, woven with love. Discover timeless handloom sarees that celebrate India’s rich weaving heritage.
© 2026 Nurpu. All rights reserved. Powered by Comez
வேலையை விடுத்து நூற்பு தொடங்குவதற்கு முன்னால் இரண்டு வருடங்களாக கைத்தறிக்கான எனது பயணத்தை மேற்கொண்டிருந்தேன். அதில் அதிகமாக எங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கும் கிராமங்களுக்கு பெரும்பாலும் நானும் எனது அப்பாவுமே சென்றிருந்தோம். சென்று விசாரித்த இடங்களில் எல்லாம் எதிர்மறையான கருத்துகளும் சலிப்புகளுமே அதிகம் இருந்தது. ஒரு சராசரி மனிதனின் வாழ்வின் பெரும் பகுதிகள் நிறைவில்லாமலே கழிந்திருக்கிறது என்பதை இந்த சாட்சியங்களே எனக்கு உணர்த்தின.
அப்பா முன்பு சேலை வியாபாரத்திற்காக மிதிவண்டியில் வரும்போது கைத்தறி அதிகம் இருந்தது என்று சிறுவலூர் அருகே கரிச்சிபாளையத்திற்கு அழைத்து வந்திருந்தார். மிகச்சிறிய ஊர். ஊர் முழுவதும் விசாரித்தும் ஒரு இடத்தில் கூட கைத்தறி இல்லை. சொல்லப்போனால் ஊரே காலியாக இருந்தது. இறுதியாக ஒருவர் சொன்னார் ஊர் எல்லையில் ஒரு வீடு இருக்கு அங்கு சென்று கேட்டு பாருங்கள் என்று.
இருசக்கர வாகனத்தில் விரைந்தோம். சிறிய குமாரசாமி கோவில், அதன் எதிரே பாவு கஞ்சி விழுந்து விழுந்து மொட மொடவென இறுகி இருந்த மண்தரையெல்லாம் பொறிந்திருந்து, இன்னும் அதிகாலை கூச்சலை தன் வெளி நினைவில் மட்டுமே பத்திரமாக வைத்திருக்கும், சகிப்புத்தன்மையின் நீட்சியாக இருக்கும் பாவடி இருந்தது. ஊரே அமைதியாக இருந்தது. ஓர் இடத்தில் மட்டும் விசைத்தறியின் சத்தத்தோடு பாடலும் கேட்டுக்கொண்டிருந்தது.
பாதி சிதலமானவீடு, வீட்டின் வெளியே கைத்தறிக்க்கான டாபி இயந்திரம் மற்றும் சிதைந்திருந்த அதன் பாகங்கள், கரையான் அரித்திருந்த இராட்டை, தண்ணி காய வைப்பதற்காக அடுப்பில் பாதி எறிந்திருந்த கைத்தறியின் விசை குச்சிகள், நெய்த இடத்தின் மேல் ஓடுகள் எல்லாம் விழுந்து மழையும் வெயிலும் பட்டு புற்கள் முழைத்திருந்தது. இவையெல்லாம் பார்த்தபோது, இங்கும் நமக்கு பூசைதான் இந்த கைத்தறி தொட்டால் வாழமுடியாது என்ற வசவுகள்தான் வரும் என்ற எண்ணத்திலே வீட்டின் உள்ளே நுழைந்தோம்.
எண்பது வயது முதியவரும் அவருடன் அவரது இளைய மகன், மருமகள் என மூன்று பேர் இருந்தனர். அறிமுகமாகிக் கொண்டு உரையாட ஆரம்பித்தோம். அந்த ஊர் பற்றியும், நெசவு பற்றியும் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். முன்பெல்லாம் சாதா இரகம் நெய்பவர்கள் பொருளாதாரத்தில் குறைவாகவும் டாபி, ஜக்கார்டு நெய்பவர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்பட்டனராம். அதில் தனக்கு ஏற்பட்ட சுய அவமதிப்பிற்காக, அதுவரை நெய்து பெற்ற தொகையும் வாடகை மிதிவண்டியை எடுத்துக்கொண்டு, ஈரோடு சென்று நான்கு நாட்கள் தங்கியிருந்து, ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு, மிகுந்த மெனக்கெடலுடன் டாபி இயந்திரத்தை வாங்கிவந்து நெய்ய ஆரம்பித்திருக்கிறார். வெளியில் கிடக்குமே அதுதான் என்று சிறு வருத்தம் கூட இல்லாமல் சிரித்துகொண்டே சொன்னார்.
”காசு கெளரவம் எல்லாம் இல்லை தம்பி, நம்ம மனசை அதுக்குள்ள இருக்கிறதை எப்படி ஒருத்தன் தப்பா பேசலாம்”. எனக்காகத்தான் இதை வாங்கிட்டு வந்தேன். என்னை சமாதானப் படுத்துவதற்குதான் வாங்கி வந்தேன்.
காந்தியை பார்த்திருக்கிறீங்களா என்றதும், சற்றே எச்சிலை முழுங்கிக்கொண்டு பாட ஆரம்பித்துவிட்டார். “காந்தியைப் போல் ஒரு சாந்த சொரூபியை பார்ததுண்டா” என்ற பாடல். பாட பாட அழுகை வந்துவிட்டது அவருக்கு. தான் பார்த்ததில்லை என்றும் சேலம் வந்திருந்தபோது பார்க்க ஆசைப்பட்டதாகவும், கதர் நெய்கிற வேலை அதிகமாக இருந்ததால் போகமுடியவில்லை என்றும் சொன்னார். சென்று பார்த்தவர்கள் வந்து சிலாகித்துகொண்ட தருணத்தை பெரும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். நெய்யும்போதெல்லாம் இதுபோன்ற பாடல்களை பாடிக்கொண்டே நெய்வோம் என்று சொன்னார்.
நான் மகிழ்ச்சியாகத்தான் நெசவு நெய்தேன், மகிழ்ச்சியாகத்தான் வாழ்வை வாழ்ந்தேன், இப்பொழுதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். கைத்தறியும் கதரும் என்னை வாழவைத்தது. அதில் கிடைத்த வருமானத்தில்தான் இரு மகன்களும் படித்து வளர்ந்தார்கள். அவர்களுக்கு இதைபற்றி புரியவில்லை. ஒரு காலத்தில் புரியவரும். எனக்கு இந்த ஊரைவிட்டு போக பிடிக்கவில்லை. கைத்தறி சத்தம் கேட்டே பிறந்து வளர்ந்தேன். இப்பொழுது இந்த ஊரில் அந்த சத்தம் கேட்க்க வில்லையென்றாலும் என்னோட மனசிலையும் ஞாபகத்திலும் அந்த தறி சத்தம் இருக்கிறது. தினமும் பாவு தோய்ந்த பாவடியில் நடந்துவிட்டு முத்துகுமாரசாமி கோவிலில் சிறிது நேரம் உட்கார்ந்து என் வாழ்வை கழித்துக்கொள்கிறேன். இந்த மண்ணிலேயே இறந்தால்தான் என் ஆன்மா சாந்தியடையும். எனக்கு இப்பொழுது எந்த குறையும் இல்லை, இப்பொழுதே கடவுள் அழைத்துக் கொண்டாலும் மகிழ்ச்சிதான் என்று நிறைவாக உரையாடினார்.
அணு அணுவாக விரும்பி கைத்தறியில் நெய்துள்ளார். ஒருபோதும் சலிப்படையவில்லை. தன் மனைவி இறப்பையும் காந்தி குறித்தும் பேசும்போது மட்டும் கண்களில் நீர் அவரையறியாமலேயே வந்தது. காந்தியை அறிந்த பிறகு வயது முதிர்வு ஏற்படும் வரை கதருக்கு மட்டுமே நெய்திருக்கிறார்.
கைத்தறி துணிக்கும் விசைதறி துணிக்கும் உள்ள வேறுபாட்டை தன் அனுபவ ஞானத்தில் தெளிவாக எடுத்துக்கூறினார். நூற்பின் பயணம் மிகுந்த நம்பிக்கையும், வாழ்வின் மீதிருந்த பிம்பங்களும் மாற்றம் கொண்டு காந்தியத்தை வலுவாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்று, சாமான்ய மனிதரில் இருந்து நிதர்சனமாக உணர்ந்த தருணங்கள் இவை. இத்தருணத்தை பரிசளித்த தந்தையை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.
கைத்தறியினையும் கதரையும் வியாபார பொருளாக பார்க்காமல், விசாலமான பார்வையினை தன்னளவில் வகுத்துக் கொண்டு தரிசித்தவர்கள் மட்டுமே நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அகம் ஏந்திக்கொண்டேன்.
நெசவை விட்டு விலகிகொண்டிருப்பவர்கள் மீண்டும் தொடர நினைப்பதும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கண்ணி அறுபடாமல் தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாகவும் அதற்கு நூற்பு ஒரு நூல் இழையாக இருக்கும் என்ற நம்பிக்கை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
அருட்பெருஞ்ஜோதி...
தனிப்பெருங்கருணை...