Enjoy FREE SHIPPING on Every Order

Handcrafted with tradition, woven with love. Discover timeless handloom sarees that celebrate India’s rich weaving heritage.
© 2026 Nurpu. All rights reserved. Powered by Comez
மனச்சுமையும் புறச்சூழலும் மாறி மாறி சுழற்றி அடித்து ஒரு புள்ளியில் நின்று யோசி வைத்தது. இந்த வேலை நமக்கானது இல்லை. இனியும் தொடர்ந்தால் அகத்தினுள் இருக்கும் நிறைவு எனும் தன்மை தொலைந்து, அனுதினமும் ஒரு நல்ல உறக்கத்தை தேடி அலையும் பூதமாக மாறிவிடுவோம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது.
இதை குக்கூ சிவராஜ் அண்ணனிடம் பகிர்ந்துகொண்ட போது, அன்றிரவே வடபழனியில் தங்கியிருந்த அறையில் இருந்து அமர் அண்ணாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். "நாளைய விடியல் நல்லதாக இருக்கும் சிவகுரு" என்ற வார்த்தையும், அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்த மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணியில் இருந்து இரவுமுழுவதும் ஒலித்த மணியோசையும் அன்றைய இரவுக்கு நம்பிக்கை கொடுத்தது.
விடியற்காலையாலேயே இருவரும் குளித்து அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்திருந்தோம். வீட்டின் வாசலில் உள்ள திண்ணையில் காத்திருந்த போது கெளசிக் வந்தார். அதுதான் முதல் சந்திப்பு. எங்கள் இருவரை உரையாட வைத்துவிட்டு அமர் அண்ணாவும் சிவராஜ் அண்ணாவும் வெளியே சென்றுவிட்டனர்.
என்னை அறிமுகம் செய்துவிட்டு, கைத்தறி நெசவில் எனக்கிருந்த விருப்பத்தையும் கைத்தறிநடாமீது இருந்து சிறுவயது தாகத்தையும் எடுத்து கூறினேன். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார். அன்றே இருவரும் நீண்டகால நண்பர்கள்போல எண்ணங்களை பரிமாறிக்கொண்டோம்.
கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டைக்கு என் ஆராயச்சிக்காக நான் குளங்களை தேடிச்சென்ற போது அங்கு காந்தியவாதி ஒருவரை சந்தித்தேன். அவர் பெயர் சுரேந்திர கௌலாகி. காந்தி, வினோபாவே மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணன் போன்றோரிடம் பணியாற்றியுள்ளார் என்றும் அங்கு மூன்றாவது தலைமுறையாக கைத்தறி நெசவை வைத்துள்ளார்கள் என்றும் சொன்னார்.
அந்த வார இறுதிவிடுமுறையிலேயே அங்கு செல்லாம் என்று உள்மனது சொல்லியதை அவரிடம் கேட்டேன். அவரும் உடனே தொலைபேசியில் அழைத்து பேசிவிட்டு சந்தோஷ் அண்ணாவிடம் கேட்டுவிட்டேன் வரச்சொல்லிவிட்டார் என்று சொன்னார். சந்தோஷ் அண்ணா அய்யாவுடைய மகன் என்றார்.
பிறகு அண்ணாவிடம் மூன்றுபேரும் உரையாடிவிட்டு அலுவலகத்திற்கு சென்றுவிட்டோம். இதைப்பற்றி தியாகு அண்ணாவிடம் சொன்னதும் "தம்பி நாம்ப போலாம் அதுவும் சனி, ஞாயிரே போயிடலாம், பயணம் நல்லதாக இருக்கும்" என்று சொன்னது நம்பிக்கையை அதிகரித்தது. இருவரும் தயாராகி அந்த வெள்ளியன்று இரவு சென்னையில் இருந்து பயணப்பட தயாரானோம்.
எப்பொழுதும் போல இறுதிநேரம் வரை அலுவலகத்தில் இருக்கும் பணியை செய்துவிட்டு புறப்பட்டேன். ஒன்பது பதினைந்துக்கு இரயில் என்றால் ஒன்பது பத்துக்குதான் இருவரும் பூங்கா இரயில் நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து ஒரே ஓட்டம் ஓடி வண்டியின் படிகட்டுகளை ஏற ஆரம்பித்ததும் வண்டி புறப்பட்டது. இன்று நினைத்தால அவ்வளவு வேகமாக ஓட வைத்தது எது என்று புரிகிறது, வியப்பாகவும் இருக்கிறது.
ஒரு பெரும் வாதையில்லாமல் எந்த ஒரு மலர்தலும் இருக்காது என்று அண்ணன் சொன்னது ஞாபகத்தில் வருகிறது.
அடுத்த நாள் காலை சுரேந்திர கௌலாகி அய்யாவை சந்தித்தோம். அருகே இருந்து காந்தியும் வினோபாவும் விழுந்த விழியின் பிம்பத்தில் எங்களது பிம்பமும் சேர்ந்ததே இந்த வாழ்வுக்கு போதும் என்று உள்மனது மகிழ்ந்தது. எங்களை அறிமுகம் செய்துகொண்டு எங்களுடைய பயணநோக்கத்தை கூறினோம். அவருடைய அனுபவங்கள் காந்தியை பார்த்து வாழ்வை மாற்றிக்கொண்டது, வினோபாவே நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த நிகழ்வு, ஜெயபிரகாஷ் நாராயணன் கூட பணியாற்றியது, சூழல் குறித்த பயணம், அய்யா நம்மாழ்வாருடைய பங்களிப்பு, ஜே.சி.குமரப்பா பற்றி என பல விதங்களில் விரிந்தது அவருடைய அனுபவம்.
என் விருப்பத்தை சொன்னபோது, இந்த காலகட்டத்தில் நிறைய பேர் தனக்கு கிடைத்த வேலையை விட்டு விட்டு ஆர்வமிகுதியில் விவசாயமோ அல்லது வேறு எதாவது சமூகம்சார்ந்த தொழிலை தொடங்குகிறார்கள். அப்படியான தொழில் கிடையாது இது. கதர் என்பதும் கைத்தறி என்பது விவசாயத்தை போல வாழ்க்கை முறைதான். இதில் லாபம் நஷ்டம் போட்டு தொழில் செய்ய முடியாது.
எப்படி பூமியில் இட்ட விதை முளைப்பதற்கு ஒரு சக்தி தேவைப்படுகிறதோ அதுபோலதான், பஞ்சில் இருந்து துணியாவதற்கு ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெரும் கூட்டத்தின் உழைப்பும் தன்னலமற்ற சுய பங்கீடும் தேவையாக இருக்கிறது. விதை முளைப்பது போலத்தான் நூழிலைகள் சேர்ந்து துணியாக மாறுவது. அத்தனை மெனக்கெடல் தேவைப்படுகிறது.
காந்தியத்தில் கதருக்கான பாதை மிகவும் கரடுமுரடானது. மேடு பள்ளங்கள் நிறைந்தது. இதில் நாம் பறக்க முடியது. நடந்துதான் செல்ல முடியும். இலக்கை வைத்துவிட்டு தொழில் செய்ய முடியாது. சில நேரங்களில் கீழே விழுந்து காயங்கள் கூட உண்டாகும். ஆனால் ஒவ்வொரு தருணமும் அனுபவமாய் மாறும்.
எத்தனை இடர்கள் வந்தாலும் அது தாங்கும் சக்தியை அதுவே கொடுக்கும். அதை பெறுவதற்கு தயாராக இருக்க வேண்டும் நாம். எவ்வளவு உள்ளார்ந்த புரிதலோடு வருகிறோமோ அவ்வளவு காலம் நீடித்து பயணிக்க முடியும். எவ்வளவு சீக்கிரம் ஆரவமிகுதியில் புரிதல் இல்லாமல் வருகிறோமோ அவ்வளவு சீக்கிரம் பழைய வேலைக்கே திரும்பிவிடுவோம். நம் தேவைக்கான அத்தனையையும் கட்டாயம் இந்த பாதை அள்ளித்தரும். வாழ்வு முறைய மாற்றியமைக்கும்.
நம் வாழ்வுக்கான நிறைவை ஒவ்வொருநாளும் கொடுக்கும். இறுதியாக நின்று நம் வாழ்வை திரும்பி பார்க்கும்போது பெரும் வாழ்வு வாழ்ந்ததுக்கான தன்நிறைவையும் அந்த வாழ்வினூடே நிறைய மனிதர்களின் வாழ்வையும் நிறைவை நோக்கி நகர்த்தியிருப்போம் என்ற கைங்கர்யமும் வாழ்வை முழுயாக்கும். நான் இன்று இத்தருணத்தில் எந்த விருப்பமும் இல்லாமல் நிறைந்த மனதோடு செல்ல தயாராக இருக்கிறேன். எனக்கிட்ட பணியை என்னால் முடிந்த அளவு உண்மையாக செய்திருக்கிறேன் என்ற நிறைந்த அனுபவத்தை எங்களுக்கு கொடுத்தார்.
பிறகு நெசவுக்கூடத்தை சென்று பாரத்தோம். பத்து கைத்தறிகளில் முழுவதும் பெண்கள்தான் நெய்து கொண்டிருந்தனர். மூன்றாம் தலைமுறையாக நெசவு அங்கு உயிருடன் இருக்கிறது. ஒரு குடும்பம் அங்கேயே தங்கியிருந்தது. பாவு தோய்வது, அதற்கு கஞ்சி காய்ச்சுவது , இயற்கை சாயம் போடுவது, பாவு சுற்றுவது என நெசவுக்கான சகலமும் அங்கே இருந்தது. குக்கூ நிலத்தில் நானும் சிவராஜ் அண்ணனும் என்ன பேசினோமோ எல்லா செயலும் கண்முன்னே காட்சியாக விரிந்திருந்தது.
சென்னைக்கு திரும்பும்போது மீண்டும் அய்யாவிடம் சென்று உரையாடினோம். அப்பொழுது ஒரு இடத்தில் எங்களுடைய சலிப்புகளை சொல்லிக் கொண்டிருந்தபோது "நல்லது மெதுவாகத்தான் நடக்கும் அது நிரந்தரமானதாக நம்முள் நிலைத்துவிடும். அதற்கான காத்திருப்பும் பொறுமையுமே வாழ்வை மாற்றும்" என்ற சொல் நூற்பிற்கான உறுதியை கொடுத்தது.
இன்றுவரை இத்தகைய மனிதர்களின் சொல்லும் வாழ்வும்தான் ஒவ்வொரு நாளின் இடர்களை நம்பிக்கையோடு கடக்க உதவுகிறது. நம்பிக்கையோடு மீண்டெழுந்து ஒட வைக்கிறது. ஒவ்வொரு நாளின் இறுதியில் நிறைவை கொடுத்து அடுத்த நாளுக்கான உற்சாகத்தை அளிக்கிறது. கண்டிப்பாக எனக்கும் அண்ணாவுக்கும் மனவெயில் விரிந்த காட்சியாக நூற்பும் மாறி நிற்கும். அதற்கான அத்தனை சாத்தியத்தையும் அறம்காக்கும் இறையின் பேரருள் நல்கும் என்று நூற்பில் இன்னும் தீவிரமாக பயணப்படுகிறேன்.
இரவு முழுவதும் ஒலித்த மாட்டின் மணியோசையும், அமர் அண்ணா வீட்டின் திண்ணையையும், கௌசிக்கையும், சுரேந்திர அய்யாவையும், பயணத்தால் நன்மை கிடைக்கும் என்று ஊக்கப்படுத்திய தியாகு அண்ணாவையும் குக்கூ நிலத்தின் நல்லதிர்வுகளையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதி...
தனிப்பெருங்கருணை...
Thiagarajan R , Amar Kannupaiyan, Kaushik Kumar
புகைப்படம் Gokul Raj
#நெசவுக்கதை
#handweavinglife
#handloomstory
#nurpuweavingstory
#weaverexperiance
#weavingstory
#weavingstory3