Enjoy FREE SHIPPING on Every Order

Handcrafted with tradition, woven with love. Discover timeless handloom sarees that celebrate India’s rich weaving heritage.
© 2026 Nurpu. All rights reserved. Powered by Comez
கணபதி தாத்தா, நூற்புக்கான என் பயணத்தை உயிர்ப்பாய் மாற்றியவர். எண்பதை நெருங்கியும் இன்னமும் கைத்தறி நெசவு நெய்து கொண்டிருக்கிறார். நிறைய மனிதர்களை இந்த பயணத்தில் சந்தித்திருக்கிறேன். எனக்கு மிகவும் நெருக்கமான மனிதர். என் தாத்தாவின் அருகில் இருந்து உரையாடுவது போலவே இருக்கும். யாரையும் குறை சொல்லாமல், இதை எழுதும் இந்த அதிகாலை நேரத்தில் கூட கைத்தறியில் அமர்ந்து இன்றும் நெய்து கொண்டிருக்கும் நிறைந்த மனது கொண்ட மனிதர்.
எல்லோரும் சூட்சம வெளியில் இருந்து தன் கடந்த கால அனுபவங்களை எடுத்து சொல்லும்போது, இவர் மட்டும் நெய்துகொண்டே கைத்தறியில் அமர்ந்து தன் வாழ்வனுபவத்தை நிதர்சனமாக முன்வைப்பார். "என்னப்பா, எப்படியிருக்க பேரான்டி" என்று ஆழ்ந்த உள்ளன்போடு, பற்கள் உதிர்ந்து வாய் முழுவதும் நிரம்பி அழைப்பார்.
மிகச் சாதாரண எளிய வாழ்வின் பின்புலம் கொண்டவர். சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக கைத்தறியில் வேட்டி சேலை நெய்து வருகிறார்.அவருடைய வீட்டில் முக்கால் பங்கை கைத்தறியே எடுத்துக் கொண்டிருக்கும். திண்ணைத்தறி. மூங்கில் (ஈர்க்கு) அச்சுதான் தறியில் பொருத்தியிருக்கும். சில காலம் முன்பு வரை, பல ஆண்டுகளாக ஒரு வகை கோரை புல்லை சிறியதாக வெட்டி அதனையே நாடாவில் நூல் சுற்றும் தார் குச்சியாக பயன்படுத்தியிருக்கிறார். நிறைய வரலாற்று சம்பவங்களை அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன்.
தாத்தா ஏன் இன்னமும் கைத்தறியை விடாம பிடித்திருக்கிறீங்க என்று கேட்டேன். ஒன்னுமில்லைப்பா, எனக்கு சின்ன வயதில் இருந்தே இந்த சத்தம் எனக்கு பிடிக்கும். எங்க அய்யா நெய்ததை பார்த்திருக்கிறேன். எந்த அவரசமும் இல்லாமல், வெறும் துண்டை மட்டும் சுற்றிக்கொண்டு தறியில் அமர்ந்து நாள் முழுவதும் நெய்வதை பார்பதற்கே அம்சமாக இருக்கும். திருநீர் வாசத்தோடு பாவு ஓட்டி வெச்சிருக்கிற நூலோட வாசமும் சேர்ந்து வருவது கோவிலுக்கு போனமாதிரியே இருக்கும்.
மற்றவர்களை போல் ஓடி ஓடி உழைக்காமல் என் வீட்டிலேயே எனக்கான வருமானத்தையும், அதே நேரம் எனக்கான நிம்மதியோடும், குடும்ப வேலைகளையும் சேர்த்து செய்ய ஒரு வேலை இருக்கும் என்றால் அது கைத்தறிதான் என்று இந்த கட்டையோடே இருந்துவிட்டேனு முகமலர்ச்சியோடு சொல்வார். அத்தோடு யாரையும் கஷ்டப்படுத்தாமல், ஏமாற்றாமல், மனதுக்கு நேர்மையா இருக்க இந்த நெசவுதான் கைகொடுத்தது என்ற அவரது சொல் நெசவின் மீது அவருக்கு இருந்த காதலையும் பக்தியையும் எனக்கு உணர செய்தது. அவரது ஒவ்வொரு சொல்லும் கனிவும் நிறைவும் கலந்ததாகவே இருக்கும்.
நான் நெய்வதற்கு கைத்தறியில் அமர்ந்தால் என்னை மறந்துவிடுவேன். என் முன்னே துணியின் வடிவமும் நூல் சேர்ந்து துணியாக மாறும் வித்தையும்தான் விரிந்து இருக்கும். எத்தனை பிரச்சனை இருந்தாலும் தறியில் அமர்ந்துவிட்டால் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். அங்கு நான் ஆனந்தத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படியான வாழ்வை எந்த தொழில் கொடுக்கும் என்பார்.
நிறைய பேர் இப்போது இதை விட்டுட்டு கொத்து வேலைக்கும், வாட்சுமேன் வேலைக்கும், ஏதேதோ வேலைக்கு போயிட்டாங்க. என்னால் போக முடியலை. மனசுக்கு பிடிச்ச தொழிலை விட்டுட்டு போய் வேலை செய்து அதில் வயிற்றை நிரப்ப என்னாலையும் முடியாது உன் பாட்டிக்கும் பிடிக்காது. பொருட் செல்வம் எனக்கு ஏற்றபடி இருப்பதால் சந்தோசமாக இருக்கிறேன். அதுக்காக காசை தேட வேண்டாம்னு சொல்லவில்லை. காசு இருந்தால்தான் இந்த கலியுகத்தில் மதிப்பு. நம் சொல்லிற்கு மதிப்பும், நாம் செய்யும் வேலைக்கு அங்கீகாரமும் கிடைக்கும். அப்பதான் நிறைய பேருக்கு நல்லது செய்ய முடியும். நல்லதா இருந்தாக்கூட கையில் கொஞ்சம் காசு இருந்து சொன்னாதான் செய்வாங்க என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்தார்.
ஒரு முறை நூறாம் நெம்பர் வேட்டி நெய்வதற்காக நூல் வாங்கி சென்றிருந்தேன். ஆரம்பத்தில் தவறாக கையாண்டு எடுத்து சென்றதில் நூல் சிட்டத்தில் சிக்கு அதிகமாகிவிட்டது. எப்பொழுதுமே சரஸ்வதி பாட்டிதான் ஊடைக்கு நூல் சுற்றுவாங்க. அவங்க பார்த்துவிட்டு, ஏம்ப்பா நூல் சிக்கு அதிகமா இருக்கு வேற கொண்டுவாப்பா என்றதும் சிறிது மனம் கனத்துப்போனது எனக்கு. அதை வெகு விரைவாக அறிந்து கொண்டு அது பத்தி கவலைப்படாதப்பா, நான் பார்த்துக்கொள்கிறேன். இனி சிட்டத்தை கொண்டுவரும் போது எப்படி எடுத்து வரவேண்டும் என்றும், எப்படி முடித்து எடுத்துவந்தால் சிக்கு விழாது என்பதையும் கற்றுக்கொடுத்தார். பிறகு அவரே ஊடைக்கும் நூல் சுற்றி நெய்தார் என்பதை வேட்டிகளை எடுக்கச் சென்றபோது பாட்டி தெரிவித்தார்.
எந்த காலத்திலும் எதிர்மறையாக பேசியதில்லை. தன்னிடம் இருப்பதிலேயே நிறைவு வேண்டும் என்ற மனத்திடம் அதிகம் வெளிப்படும். ஒவ்வொரு முறையும் துவண்டு போகும்போது இவரை நினைத்துக் கொண்டாலே போதும் எனக்கான சக்தி அகத்தினுள் தானாக பெருகிக்கொள்ளும். காந்தியை பார்த்திருக்கிறீங்களா என்று ஒரு முறை கேட்டபோது, இல்லைப்பா. ஆனால் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே மனிதர். அதற்காக எந்த கஷ்டமும் இல்லை. அதுக்கு தான் இந்த தறி இருக்கே. இதுல ஏறி உட்காந்துவிட்டால் யாரை பார்க்க வேண்டுமோ அவங்களை பார்த்துவிடுவேன் என்று சிரித்தபடியே விளையாட்டாக பெரும் தத்துவத்தை முன் வைத்தார்.
நமக்கு என்ன தேவை என்பதை, நாம் இருக்கும் இடத்தை சுற்றி வெறும் கால்களால் நடந்து சென்றாலே அது கிடைத்துவிடும். நாம் சந்திக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்களது எளிய வாழ்வும், நம் பயணத்திற்கான அகத்திறப்பை உருவாக்கும் என்று நூற்பு ஆரம்பிக்கும்போது, குக்கூ நிலத்தின் புளியமரத்தடியில் சிவராஜ் அண்ணன் சொன்னதை இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதி...
தனிப்பெருங்கருணை...
புகைப்படம் Ayyalu R. Kumaran , Jothi Photos